அதிமதுரம்
அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.