ஆசிரியர்: பொன் மகாலிங்கம்
பொன் மகாலிங்கம் என் நண்பர். மொழி, வரலாறு இவற்றில் திளைக்கும் இவர் செய்வன திருந்தச் செய்பவர்; கடும் உழைப்பாளி. அதனை நேராகப் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அவரது உழைப்பில் உருவாகியிருக்கும் முதல் நூல் “அங்கோர் வாட்”. விறுவிறுப்பான கதைகூறல், எழுத்துநடை இவற்றால் ஒரே நாளில் வாசித்து முடித்தேன். அங்கோர் வாட்டுக்கு 2017 டிசம்பரில் குடும்பத்துடன் சென்றுவந்த அனுபவம் உண்டு என்பதால் இந்த நூலில் உள்ள பல வர்ணனைகளை என்னால் முழுமையாக ரசிக்க முடிந்தது. நேரில் பார்த்தபோது தெரிந்து கொள்ளாத அல்லது தெரிந்துகொள்ள முடியாத பல தகவல்கள், மகாவின் அழகான கதைகூறலால் உயிர்பெற்று எழுந்து கண்முன் நிற்கின்றன.
தனக்கு வரலாற்றில் பைத்தியம் உண்டு என்கிறார் மகா. எனக்கு வரலாற்றில் பிரியம் உண்டு. கோயில், சிற்பம், சிலை, ஓவியம், அரும்பொருளகம் என்றால் சோறு தண்ணி வேண்டாம் என்று அவர் கூறியதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் கிட்டத்தட்ட அவரது முகநூல் பதிவுகள் அனைத்துமே இவற்றைத்தான் பதியம் போடுகின்றன. அங்கோர் வாட் மீதான ஆசை “கிடுகிடுவென புது HDB வீட்டுக் கட்டுமானம் மாதிரி வளர ஆரம்பித்தது”. பின்னர் அந்த ஆசை “கலிமந்தான் காட்டுத் தீயாய் வளர்ந்தது” போன்ற வரிகள் அவருக்குள்ள சிங்கப்பூர்த் தொடர்பையும் வட்டார அறிவையும் புலப்படுத்துகின்றன. தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் பற்றிப் பல இடங்களில் எழுதியிருக்கும் அவர், தான் பணிபுரியும் இந்த மண்ணைப் பற்றியும் இதுபோன்று ரசனையோடு எழுதியுள்ள பல வரிகள் வாசிப்பதற்கு இதமாக இருந்தன. ஹெலிகாப்டருக்கான தமிழ்ப் பதம் உலங்கு வானூர்தி என்று இந்த நூலை வாசித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். உலங்கு வானூர்தியில் ஆகாயத்திலிருந்து தான் பார்த்த அங்கோர் வாட்டின் அழகை அவர் விவரிப்பதும் அழகே! “முந்திய இரவில் மழை பெய்திருந்தது எங்கள் பாக்கியம். எல்லா இடங்களும், குளித்துவிட்டு வந்து அம்மணமாய் நிற்கும் குழந்தைபோல் தெய்வீக அழகுடன் இருந்தன.”
நம் எண்ணங்களையும் மனப்போக்கையும் மாற்றக்கூடிய சக்தி வாசிப்புக்கு மட்டுமல்ல, பயண அனுபவத்துக்கும் உண்டு என்பதை கம்போடியாவின் வறுமைச் சூழல் காரணமாக அங்கு நிலவும் ஒரு நடைமுறையைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார் நூலாசிரியர். ஏற்கெனவே திருமணமான, வயதான வெள்ளைக்காரர்கள் கம்போடியாவில் இளம் பெண்களை மணந்துகொண்டு அப்பெண்களின் குடும்பச் செலவுகளை ஏற்றுக்கொள்வது அங்கு பரவலாக நிலவும் ஒன்று. “இந்தக் கதை தெரிந்தபின் கண்ணில் தென்படும் பொருத்தமற்ற ஜோடிகள் பற்றிய என் மனப்போக்கு மாறியது. அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு. இதில் நாம் யார் அதுபற்றித் தீர்மானிக்க?,” என்கிறார். நூல் வாசிப்பால் மனப்போக்கு மாறிய அனுபவம் எனக்குமுண்டு.
எனவேதான் நூலகங்கள் என் மனதுக்கு மிக நெருக்கமானவை. அங்கோர் சிதைவுகளைப் பார்த்துக்கொண்டே வரும்போது ஆலய வளாகத்துக்குள் நூலகங்கள் இருந்திருக்கின்றன என்பதை வழிகாட்டி மூலம் அறிந்தவுடன் தனது மகிழ்ச்சியை இவ்வாறு கூறுகிறார் மகா – “ஆலய வளாகத்துக்குள் நூலகத்துக்கும் இடமளித்த மன்னன் இரண்டாம் சூரியவர்மனுக்கு ஒரு ஜே!”. இங்கு நானும் ஒரு சபாஷ் போட்டுக் கொண்டேன்!
சில சிற்பங்களைப் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட ஆதங்கம் நூலாசிரியருக்கும் ஏற்பட்டிருக்கிறது குறித்து வியந்தேன். அங்கோர் வாட்டின் பல சிற்பங்கள் மீது வண்ணத் துணிகள் போர்த்தப்பட்டிருந்ததைப் பார்த்துச் சினம் கொள்கிறார் அவர். “பழமையான பஞ்சலோகச் சிலைகளுக்கும் சிற்பங்களுக்கும் ஆடை உடுத்தி இருப்பதைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக்கொண்டு வரும். சிலைகளின் முழுமையான அழகை வெற்றுத் திருமேனியில்தான் கண்டு திளைக்கமுடியும்” அலங்காரம் என்ற பெயரில் துணிகளால் மூடப்பட்டிருக்கும் சிலைகளைப் பார்த்துப் பார்த்து வெதும்பும் நூலாசிரியர், “இறைத் திருமேனிகளுக்குச் செயற்கை ஆடை அணிவிக்கக்கூடாது என்று ஐக்கிய நாட்டு அமைப்பிலிருந்து ஓர் உத்தரவு வந்தால் தேவலாம்,” என்கிறார். நாம் சேர்ந்தே ஒரு பெட்டிஷன் போடுவோம் மகா!
கம்போடியாவில் நான்கு ஆண்டுகள் கெமரூஷ் ஆட்சி போட்ட பேயாட்டத்தைப் பற்றி 17ஆம் அத்தியாயத்தில் விவரிக்கிறார் நூலாசிரியர். அதனை வாசித்தபோது, 14 ஆண்டுகளுக்கு முன்பு வானம் வசப்படுமே தொடருக்காக நான் வாசித்த சில நூல்கள் நினைவுக்கு வந்தன. தனது நான்கு நாள் பயணத்தில் கடைசி நாளில் புனோம் பென் அரும்பொருளகத்துக்குச் சென்றதன் நிறைவை மூன்றே சொற்களில் இவ்வாறு விவரிக்கிறார் நூலாசிரியர் – “இன்று நாங்கள் வாழ்ந்தோம்!” நம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் நம்மால் இந்த மூன்று சொற்களைச் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைப்பதைவிட அவர்களைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்ற கோரிக்கையையும் பெற்றோர்களுக்கு முன்வைக்கிறார் ஆசிரியர். நியாயமான, தேவையான ஆலோசனை. இந்தச் சிந்தனையோடு, நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோள். தன் ஆயுளில் காண விரும்பிய இடங்கள் இரண்டு என்றும் அங்கோர் வாட்டுக்குப் பிறகு எஞ்சியிருப்பது எகிப்தியப் பிரமிடுகள் என்றும் கூறும் மகா, “அவற்றை எப்போது காண்பேன்? எப்போது அதுபற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதுவேன்?” என்றும் ஆதங்கத்துடன் கேட்கிறார்.
மகா – உங்களுக்கு இப்போதிலிருந்து மூன்று ஆண்டு அவகாசம். அதற்குள் உங்கள் இரண்டாம் கனவை நிறைவேற்றி, அதுகுறித்த உங்களது இரண்டாவது பயணக்கட்டுரை நூலையும் நீங்கள் 55 வயதை எட்டுவதற்குள் பதிப்பிக்க வேண்டும். இதுவே எனது அன்புக் கட்டளை! அட்டையிலும் உள்ளடக்கத்திலும் அழகு பொதிந்து கிடக்கும் இந்த நூல் விரைவில் தேசிய நூலக வாரியக் கிளைகளை அலங்கரிக்கும் – அழகிய பாண்டியன்
ஆசிரியர் சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.
Reviews
There are no reviews yet.