ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
பக்கங்கள்: 120
தான் எனும் அகங்காரம், அது கொடுக்கும் கோபம், அதன் உந்துதலில் அழியும் குலம்… என்பதை இரத்தமும் சதையுமாக நம் எண்ணங்களை ஆட்கொள்கிறாள் அரியநாச்சி.
சாதாரண விசயத்துக்காகக் கொலை செய்து விட்டு, ஜென்மக் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெள்ளையத்தேவனைக் காண, அவரது முதலும் மூத்தவளுமான மகள் அரியநாச்சி சிறைக்கு வருகிறாள். அவள் நிறைசூழி. தனது தங்கையான மாயழகிக்கு தனது கொழுந்தன் சோலையைக் கல்யாணம் செய்யும் பொருட்டு, தந்தையின் சம்மதம் வேண்டி பார்த்து விட்டு செல்கிறாள்.
இதனை அறிந்து கொண்ட அவளது இளைய சகோதரன் பாண்டிக்கு கோபம் எழுகிறது. சாதாரணமாகவே அவனது அக்காவின் ஊரான வெள்ளாங்குளம் என்றாலே அவனுக்கு அவ்வளவு வெறுப்பு. இதில் அரியநாச்சியின் செயல் அவனது கோபத்திற்கு எண்ணெய் ஊற்ற, அதை மேலும் அவனது மனைவி குமராயி ஊதி பெருதாக்குகிறாள்.
அரியநாச்சி, பாண்டி, மாயழகி மூவரும் சிறு வயதிலேயே தாயை இழந்து விட, அவர்களை சீராட்டி வளர்த்தது வள்ளி அத்தை தான். நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று விட்ட பிறகு, தன் அண்ணனுடைய மக்களை சொந்த மக்களாக பாவித்து வரும் வள்ளிக்கு, இப்பிரச்சனை மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது.
பாண்டி தன் மச்சினனுக்கும், அரியநாச்சி தன் கொழுந்தனுக்கும் என மாயழகியை மணமுடிக்க நினைக்க, இப்பிரச்சனை வெள்ளாங்குளம் – பெருநாழி எனும் இரு ஊராரின் பிரச்சனையாக வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனினும், அரியநாச்சியின் கணவன் சக்கரைத்தேவனின் பெருந்தன்மையினால், மாயழகியை பாண்டியின் மச்சினனுக்கு நிச்சயம் முடித்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணமும் நடக்கிறது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, திருமணம் முடிந்த அன்றே, மாயழகி, அரியநாச்சி, குமராயி மூவருமே தாலி அறுக்கின்றனர்.
கோபம், மூர்க்கம், சினம் என எல்லாம் ஒரே உணர்வைக் குறித்தாலும் அவை வெளிப்படும் அளவுகளில் வேறுபடும். இக்கதை மாந்தர்களின் உணர்விலும், வாழ்விலும் இரண்டறக் கலந்திருப்பதும், வெளிப்படுவதும் மூர்க்கம் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பே.
வாழ்வுக்கும் வார்த்தைக்கும் உணர்வுக்கும் இடையே கண நேர இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து என உடனுக்குடன் காரியத்திற்கு துணிந்த பின்னரே, அதனை எண்ணிக் குமைகின்றனர்.
Reviews
There are no reviews yet.