ஓவிய விபரம்: கணினி கலை எண்ணியல் அச்சு
( Digital Print, Matte finishing and Framed )
ஓவியர்: திரு. விஷ்ணு ராம்
தாராசுரம் கோவில் பற்றிய தகவல்
வாழ்க்கைப் பயணத்தின் எல்லையற்ற வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் பழங்காலத்தின் சுவடுகளே புதிய வழித்தடங்களை உருவாக்குகின்றன. தமிழகக் கோயில்கள் தன்னகத்தே கலை, இலக்கியம், சமூகஊடாட்டம், தத்துவம், இது போன்ற இன்னும் கண்டுபிடிக்க இயலாத பல இரகசியங்களைக் கொண்டுள்ளன. அவை நூல் நிலையமாக, வரிவசூலிக்கும் இடமாக, மூலிகைகளின் தோட்டமாக, ஊர்மக்களின் ஆவணங்களையும், அணிகலன்களையும் பாதுகாக்கும் கருவூலமாக, நிலைப்படைகள் தங்கியிருந்த இடமாக, பலருக்கும் புகலிடமாக இருந்திருக்கின்றன. இத்தகைய சிறப்புபெற்ற கோயில்களை வழிபாட்டுத்தலங்களாக மட்டுமே பாவிக்கிற நம் மக்களின் மனங்களில் கோயில்களின் வேறு பரிமாணங்களைக் கொண்டு சேர்ப்பது இன்றியமையாததாகும்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராசராச சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார்.
இக்கோயில் அர்த்த மண்டபம், முகமண்டபம், இராஜகம்பீர மண்டபம், கருவறை மண்டபம் எனும் நான்கு மண்டபங்களைக் கொண்டது. அடிப்பகுதி, தூண்கள் மற்றும் விதானங்களில் மூன்று பகுதிகளாகச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில்நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தின் வெளிபுறச் சுவர்களில்.கீழிருந்து மேற்புறம் வரை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் நடுப்பகுதியிலேயே இவ்வறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன.
சோழர்காலத்தில் அதிக அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. அதனால் கலையும் கலாச்சாரமும் சிறப்படைந்தது. அக்கோயில்களில் இசைக்கும், நடனத்திற்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. ஆகவே இசையும் நடனமும் ஆழமாக வேரூன்றி சைவசமய பக்திச் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகஅமைந்தது, இக்கோயிலில் நடனம், இசை, மற்றும் பொழுதுபோக்குகளை வெளிப்படுத்தும் பல்வேறு சிற்பங்கள் அமைந்துள்ளன.
கோயிலின் நுழைவாயிலில் நந்தி சிலைக்கு முன் இசைப்படிக்கட்டுகள் காணப்படுகின்றன. அக்காலத்தில் எழுத்தறிவில்லாத மக்களையும் சைவத்தில் ஒன்றுபடுத்த இசையை ஒருகருவியாகப் பயன்படுத்தினர். மக்களிடம் நெருங்கிய தொடர்புடையனவான மகிழ்ச்சி, துக்கம், கேளிக்கை, பக்தி எனும் அகவயப்பட்ட அனைத்துச் செயல்பாடுகளிலும் இசையும் நடனமும் ஒன்றாகக் கலந்திருந்தன.
Reviews
There are no reviews yet.